உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் முழு படிப்புச் செலவையும் ஏற்கிறேன் – சேவாக் உருக்கம்


தமிழகத்தைச் சேர்ந்த இருவரின் உடல்களும், அவர்கள் சொந்த ஊர்களில், 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் முழு படிப்புச் செலவையும் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் ஏற்பதாகக் கூறியுள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த 14-ம் தேதி மாலை சி.ஆர்.பி.எப் (துணை ராணுவப்படையினர்) சுமார் 2,500 வீரர் 90-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா அருகே வந்தபோது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்தப்பட்டது.

இந்தப் பயங்கரமானத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற 2 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர்.

இறந்த வீரர்களின் இறுதிச் சடங்குகள் அவரவர் ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த இருவரின் உடல்களும், அவர்கள் சொந்த ஊர்களில், 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் முழு படிப்புச் செலவையும் ஏற்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், “ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்துக்கு என்ன செய்தாலும் அதுக்கு ஈடாகாது. ஆனால், குறைந்தபட்சம் உதவியாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது வீரமிக்க சி.ஆர்.பி.எப் வீரர்களின் குழந்தைகளின் முழு படிப்பையும் என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியின் மூலம் முழுமையாக வழங்கிட முடியும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ரிலையன்ஸ் பவுண்டேஷன் அமைப்பு ஏற்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*