துணைநிலை ஆளுநருக்குத்தான் அதிகாரம்! சென்னை திரும்பிய கிரண்பேடி வாதம்


நிதி அதிகாரம், பாதுகாப்பு விவகாரங்களில் இறுதி அதிகாரம் துணைநிலை ஆளுநராகிய என்னிடம்தான் உள்ளது.

நிதிநிலை விவகாரம், பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றில் இறுதி அதிகாரம் என்னிடம்தான் உள்ளது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இரண்டாவது நாள் போராட்டத்தின்போதே, கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்ற விவகாரம் தொடர்பாக, பொதுத்தளத்தில் விவாதம் நடத்தத் தயாரா என்று நாராயணசாமிக்கு கிரண்பேடி சவால் விடுத்தார். எந்த நேரத்திலும் விவாதத்தில் பங்கேற்க தயாராக இருப்பதாக இடத்தை இன்று அறிவித்தார் நாராயணசாமி.

இந்தநிலையில், டெல்லி சென்றிருந்த கிரண்பேடி இன்று சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, ‘மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல நான் வெறும் ஆளுநர் அல்ல. நான் துணை நிலை ஆளுநர். நிதி அதிகாரம், பாதுகாப்பு விவகாரங்களில் இறுதி அதிகாரம் துணைநிலை ஆளுநராகிய என்னிடம்தான் உள்ளது. நீங்கள், எதற்காக எனக்கு கோப்புகளை அனுப்புகிறீர்கள். என்னுடைய ஒப்புதல் உங்களுக்கு தேவைப்படுகிறது.

அதனால்தான், எனக்கு அனுப்புகிறீர்கள். அரசு என்றால் நிர்வகாம் என்று அர்த்தம். அதன்படி, நிர்வாகத்துக்கான அதிகாரம் என்னிடம்தான் உள்ளது. நான் வெறுமனே கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது. கோப்புகளை ஆய்வு செய்யவேண்டும். சில நேரங்களில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்யவேண்டும். நான், சட்டத்தைப் பின்பற்றுகிறேன்.

எனக்கான, அதிகாரத்தை நாடாளுமன்றம் வரையறுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் அந்த அதிகாரத்தை மாற்றினால்தான், அதில் நீங்கள் உரிமை கோர முடியும். ஆளுநர்களுக்கான அதிகாரம் தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாராயணசாமி மேற்கோள்காட்டுகிறார். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு புதுச்சேரிக்குப் பொருந்தாது.

டெல்லி விவகாரம் அரசியலமைப்பு விதியின் கீழ் வருகிறது. புதுச்சேரி, நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் வருகிறது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதத்துக்கு நாராயணசாமி ஒப்புக்கொண்டது ஆரோக்கியமான விஷயம். இன்று, நான் அவரைச் சந்திக்கவுள்ளேன். ஹெல்மெட் அணியும் விவாகரத்தைப் பொறுத்தவரையில், நமக்கு அதில் வேறு வாய்ப்புகளே கிடையாது. சாலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நான் அனைவரும் ஹெல்மேட் அணிந்தாகவேண்டும்’ என்று தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*